சத்தியமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்
சத்தியமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து, அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;
சத்தியமங்கலம் நகராட்சி, அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் திமுகவை கண்டித்து, அதிமுக சாா்பில் இன்று (8ம் தேதி) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.
இரண்டாவது முறையாக சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி, அாியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிவராஜ், அரியப்பம்பாளையம் பேரூர் அதிமுக செயலாளர் தேவமுத்து, மாவட்ட பிரதிநிதி சோழா சேகர், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வாா்டு, கிளை நிா்வாகிகள், சாா்பு அமைப்பு நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.