அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், வனச்சரக அலுவலகம் எதிரே வசித்து வருபவர் பழனிச்சாமி. அந்தியூர் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரான இவர், நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
வீட்டில் யாரும் இல்லாததை கண்காணித்து வந்த மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று காலையில் வீட்டிற்கு வந்த பழனிச்சாமி பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.