ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட் டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்துள்ள சின்னசேலம் கனியாமூரில் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீ வைத்து எரித்தனர். கல் வீச்சு சம்பவத்தில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், இன்று முதல் பள்ளிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகள் இன்று மூடப்பட்டிருந்தது. ஒரு சில பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை மட்டுமே செயல்பட்டது.
இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சந்திர சேகர் கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, ஈரோடு மாவட்டத்தில் எங்களது கூட்டமைப்பில் உள்ள 100 பள்ளிகளும் மூடப்பட் டுள்ளது என்றார்.