திருப்பதி லட்டு விவகாரம்: கோபியில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிட்ட இந்து முன்னணியினர்
Erode news- திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபி நகர இந்து முன்னணி சார்பில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிட்டு, வழிபாடு நடைபெற்றது.;
Erode news, Erode news today- திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கோபி நகர இந்து முன்னணி சார்பில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிட்டு, வழிபாடு நடைபெற்றது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் தரிசனம் முடித்து வெளியில் வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் தயாரிக்கப்படும் லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டினை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது.
இந்நிலையில், பக்தா்கள் மத்தியில் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் கோபி நகர இந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைத்து முறையிட்டு, வழிபாடு நடத்தும் நிகழ்வு இன்று (28ம் தேதி) நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர தலைவர் விமல்குமார் முன்னிலையில் கடைவீதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலின் முன்பு உள்ள சாலையில் தேங்காயினை உடைத்து முறையிட்டனர். பின்னர், ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர்.
இதில், நகர செயலாளர் சந்திரன், நகர துணைத்தலைவர் பால்ராஜ், நகர பொறுப்பாளர்கள் சபரி,வசந்த், தயானந்த் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.