ஈரோட்டில்"உயர்வுக்கு படி" உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி சேர்க்கை முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில், 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி' என்ற திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நான் முதல்வன் - உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சேர்க்கை முகாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி” என்ற நிகழ்ச்சியானது, கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வருகிற ஜூலை 1-ம் தேதி நடைபெறுகிறது. உயர்கல்வியினை தேர்வு செய்யாத மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள், உயர்கல்வி நிறுவனங்களில் உடனடி சேர்க்கை இந்நிகழ்ச்சின் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை கலந்து கொண்டு குறுகிய கால திறன் பயிற்சிகள், தொழிற்பயிற்சி, தொழில் பழகுநர்ப் பயிற்சி, இளங்கலை பட்டப்படிப்பு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவ்விடத்திலேயே சேர்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.
மேலும் இதில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவியிர்களுக்கும் ஏதேனும் ஒரு துறையில் பயனடையும் வகையில், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மகளிர் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு, வங்கி கடனுதவி ஆலோசனைகள், சாதி சான்றிதழ்கள் அவ்விடத்திலேயே வழங்கப்படவுள்ளது. மேலும் சிறந்த வல்லுநர்கள் வாயிலாக உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும் உயர் கல்வி குறித்த கையேடுகள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று நடைபெற்ற 'நான் முதல்வன் உயர்வுக்கு படி' என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சேர்க்கை முகாமில் பங்கேற்றவர்களில் 17 மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான கல்லூரி சேர்க்கையும் மற்றும் 4 மாணவ, மாணவியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டும் பயன்பெற்றனர். இந்நிகழ்வின்போது, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) ராதிகா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியை சத்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.