ஈரோடு மாவட்டத்தில் உயர் கல்வி சேர்க்கை 94 சதவீதமாக அதிகரிப்பு: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி சேர்க்கை 94 சதவீதமாக அதிகரித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-27 03:00 GMT

உயர்வுக்கு படி முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மாணவன் அபிஷேக்.

ஈரோடு மாவட்டத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி சேர்க்கை 94 சதவீதமாக அதிகரித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் விண்ணப்பிக்க தவறிய, தோல்வியுற்ற மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேரும் வகையிலும், திறன் மேம்பாட்டிற்காக தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், எதிர்கால உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் ஈரோடு மற்றும் கோபி கோட்ட அளவில் "உயர்வுக்கு படி" சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் ஈரோடு கோட்டத்தில் 11.09.2024 அன்று முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 19.09.2024 அன்று இரண்டாம் கட்டமாக ஈரோடு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கோபி கோட்டத்தில் 12.09.2024 அன்று முதற்கட்டமாக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 23.09.2024 அன்று இரண்டாம் கட்டமாக கோபி பி.கே.ஆர் மகளிர் கலை கல்லூரியிலும் உயர்வுக்கு படி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐ, அரசின் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மூலம் முகாம் அமைத்து நேரடி சேர்க்கை நடைபெற்றது. மேலும் கல்விக் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு ஏதுவாக வங்கிகளை முகாமில் பங்கேற்க செய்து கல்வி கடன் மேளா ஏற்பாடு செய்யப்பட்டது.

2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டுகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று உயர் கல்வியில் சேராத 470 மாணவர்கள் உயர்வுக்கு படி முகாமில் கலந்து கொண்டனர். அம்மாணவர்களை அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. "உயர்வுக்கு படி" முகாம் மற்றும் "கல்லூரி கனவு" ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக 2022-23ஆம் கல்வி ஆண்டில் 112 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 14,744 மாணவர்களில் 85 சதவீதம் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

மேலும், 2023-24ம் கல்வியாண்டில் 112 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 10,652 மாணவர்களில் 10,013 மாணவர்கள் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ, அரசின் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 94 சதவீதம் உயர் கல்வியில் நிறைந்த மனதுடன் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 சதவீத மாணவர்கள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

உயர்வுக்கு படி முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மாணவன் எம்.அபிஷேக் நிறைந்த மனதுடன் தெரிவித்துள்ளதாவது, நான் ஆலூத்துப்பாளைத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். நான் 2022-2023 ஆம் ஆண்டில் மொடக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எனது 12 ஆம் வகுப்பை முடித்துள்ளேன். என்னிடம் சாதிச் சான்றிதழ் இல்லாததால் எந்த உயர் படிப்பிலும் சேர முடியவில்லை.

நான் உண்மையிலேயே சோகமாக உணர்ந்தேன். எனது வகுப்பு ஆசிரியர் மூலமாக 11.09.2024 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சாதிச் சான்றிதழைப் பெற முடிந்தது. மேலும் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பி.ஏ..[வரலாறு] பிரிவில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திட்டத்தின் மூலமாக எனக்கு கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் எனது கல்லூரிக்கனவு நனவாகியுள்ளது. எனக்கு இவ்வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News