ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: ஒரேநாளில் 243.70 மி.மீ மழை பதிவு
Erode news- ஈரோடு மாவட்டத்தில் நேற்று (நவ.2) கொட்டித்தீர்த்த கனமழையால் ஒரேநாளில் 243.70 மீ.மி மழை பதிவாகி உள்ளது.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நேற்று (நவ.2) கொட்டித்தீர்த்த கனமழையால் ஒரேநாளில் 243.70 மீ.மி மழை பதிவாகி உள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று (நவ.2) அறிவித்திருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, ஈரோடு பேருந்து நிலையம், நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, சத்தி சாலை, கடைவீதி, காந்திஜி சாலை, காளைமாடு சிலை, சென்னிமலை சாலை, ரயில் நிலையம், மரப்பாலம், கொங்காலம்மன் கோவில் வீதி, பெரும்பள்ளம் ஓடை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காந்திஜி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பாலத்தில் மழை வெள்ளம் குளம்போல தேங்கியது. அதுமட்டுமின்றி பாலத்தையொட்டி பெரியார் நகர் நுழைவு வாயிலின் அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் மழை வெள்ளத்துடன் சேர்ந்து குழு குபு என வெள்ளம் வெளியேறி வாகன ஓட்டிகளை அச்சப்படுத்தியது.
காளைமாடு சிலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் ரோடு சாக்கடை எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.
இதேபோல், கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை கவுந்தப்பாடி, கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் நேற்று மழை கொட்டி தீர்த்தது . இந்த மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 2) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவம்பர் 3) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 42, மொடக்குறிச்சி 2, கொடுமுடி - 12, பெருந்துறை - 6, சென்னிமலை - 12, பவானி - 1, கவுந்தப்பாடி - 4.20, அம்மாபேட்டை - 2.80, வரட்டுப்பள்ளம் அணை - 1.20, கோபிசெட்டிபாளையம் - 3.20, எலந்தகுட்டைமேடு - 3.80, கொடிவேரி அணை - 15, குண்டேரிப்பள்ளம் அணை - 54, நம்பியூர் - 19, சத்தியமங்கலம் - 22, பவானிசாகர் அணை - 41.40, தாளவாடி - 2.20 என மாவட்டத்தில் மொத்தமாக 243.70 மீ.மீ மழையும், சராசரியாக 14.34 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.