கோபிசெட்டிபாளையத்தில் ரூ.7.17 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7.17 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் இருமுறை வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் வாழைத்தார் ஏலத்தில் கோபி மட்டுமன்றி நம்பியூர், பங்களாபுதூர், டி.என்.பாளையம் ,அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், துறையம்பாளையம், கலிங்கியம், குருமந்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் கலந்து கொள்வது வழக்கம்.
இன்று நடைபெற்ற ஏலத்தில் 2 ஆயிரத்து 835 வாழைத்தார் வரத்து இருந்த நிலையில், கடந்த வாரம் 53 ரூபாய்க்கு விலை போன கதளி இந்த வாரம் ஒரு கிலோ 51 ரூபாயாக குறைந்தது. கடந்த வாரம் 43 ரூபாயாக இருந்த நேந்திரன் இன்று ஒரு கிலோ 49 ரூபாயாக அதிகரித்தது.
அதே போன்று பூவன் தார் ஒன்று 810 ரூபாய் வரையிலும், தேன் வாழை 790 ரூபாய் வரையிலும், செவ்வாழை 940 ரூபாய் வரையிலும், பச்சைநாடன் 440 ரூபாய் வரையிலும், ரொபஸ்டோ 600 ரூபாய் வரையிலும், ரஸ்தாளி 560 ரூபாய் வரையிலும், மொந்தன் 510 ரூபாய் வரையிலும் விலை போனது. இன்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 7 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.