அந்தியூர் அருகே டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
அந்தியூர் அருகே மூலக்கடை பகுதியில் உள்ள டீக்கடையில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் மூலக்கடையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வருவதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்து 34 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 10 பான்மசாலா என மொத்தம் 44 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.