ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளம் அறிவியலாளருக்கு ஜி.டி.நாயுடு விருது: ரூ.1 லட்சம் பரிசு தொகை
Erode News- மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளம் அறிவியலாளருக்கு ஜி.டி.நாயுடு விருதும், ரூபாய் ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
Erode News, Erode News Today- மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளம் அறிவியலாளருக்கு ஜி.டி.நாயுடு விருதும், ரூபாய் ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20ம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை 12 நாள்கள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி மாலை நிகழ்ச்சி அறிவியல் சிறப்பு நிகழ்வில் இளம் அறிவியலாளர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையுடன் கூடிய அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு விருது வழங்கப்படவுள்ளது.
விருதாளர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுக்கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வகங்களிலோ ஆய்வுகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
பெயர்பெற்ற சர்வதேச அறிவியல் இதழ்களில் குறைந்தபட்சம் பத்து ஆய்வுக் கட்டுரைகளாவது வெளிவந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு கல்லூரியில் ஒரு பட்ட வகுப்பாவது படித்திருக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டிலோ இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு நிறுவனத்திலோ ஆய்வகத்திலோ பணியோ ஆய்வோ செய்து கொண்டிருக்க வேண்டும்.
இவையனைத்தும் இவ்விருதுக்காக விண்ணப்பிப்பதற்கு அடிப்படைத் தகுதிகளாகும். இவ்விருது பாராட்டுக் கேடயம், ரூபாய் ஒரு லட்சம் பரிசு, தன்னுடைய கண்டுபிடிப்பு பற்றி மக்களிடம் உரையாற்றும் வாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். எந்தக் கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியனுப்ப வேண்டும்.
ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் வரும் ஜூலை 30ம் தேதிக்குள் info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விருதாளரை ஐந்து மிக மூத்த தகுதிமிக்க அறிவியலாளர்களை உள்ளடக்கிய நடுவர் குழு தேர்வு செய்யும்.
இந்த ஆண்டின் விருத்தாளருக்கு ஆகஸ்ட் 11ம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழா நிகழ்வில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக விளங்கிய வரும், அறிவியலுக்காக பத்மபூஷன் விருது பெற்ற விஞ்ஞானியுமான தி.இராமசாமி வழங்கவுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.