சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சத்தியமங்கலம் அருகே கேர்மாளம் பகுதியில் இன்று மாலை இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-09-09 15:15 GMT

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்துகள்.

சத்தியமங்கலம் அருகே கேர்மாளம் பகுதியில் இன்று (9ம் தேதி) திங்கட்கிழமை மாலை இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று இன்று (9ம் தேதி) திங்கட்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தியாகராஜ் என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில், கேர்மாளம் அருகே உள்ள வைத்தியநாதபுரம் புதுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தும், எதிரே கேர்மாளம் செக்போஸ்ட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பயணிகளுடன் கவின்குமார் என்பவர் ஓட்டி வந்த அரசுப் பேருந்தும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், சத்தியமங்கலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியும், கேர்மாளம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க முகப்பு விளக்குகளும் உடைந்து சேதமடைந்தது. விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்களுக்கோ, பயணம் செய்த பயணிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த கடம்பூர் போலீசார் மாற்று ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News