கோபிச்செட்டிப்பாளையம் அருகே கிராம மக்கள் விடிய, விடிய சாலை மறியல் போராட்டம்

ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு கிராம மக்கள் விடிய, விடிய சாலை மறியல் போராட்டம்.

Update: 2021-11-26 10:30 GMT

சாலை மாறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த   டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகரில் வனத்தையொட்டி உள்ள 42 அடி உயரமுள்ள குண்டேரிப்பள்ளம் அணை, இந்த அணையானது கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் ஆண்டு தோறும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணை வனத்தையொட்டி அமைந்து உள்ளதால், கோடை காலங்களில் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது, வன பகுதியில் உள்ள யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளும் இந்த அணையிலேயே தண்ணீர் குடித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த அணையின் அருகே தனியார் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய் மூலமாக 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 6 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் விவ்சாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தனியார் சிலர் குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல 33 ஆண்டுகளாக வினோபா நகர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, காவல் துறை பாதுகாப்புடன் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், நீதிமன்றத்தில் குழாய் அமைக்கும் பணிக்கு தடை உத்தரவு பெற கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து, 15 நாட்கள் அவகாசத்தை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அளித்தனர். 15 நாட்களில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், முடியாத நிலையில் குழாய் அமைக்கப்படும் எனக்கூறி இருந்தனர். 

இந்நிலையில் இன்று காலை அமைக்க மீண்டும் குழாய் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்ட குழுவை சேர்ந்த வேலுமணி, ரவி ஆகிய 2 பேரை நேற்று நள்ளிரவில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அழைத்து சென்றனர். இதுபற்றி தெரிய வந்ததும் வினோபாநகர், கொங்கர் பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவ- மாணவிகளுடன் திரண்டு அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களை முற்றுகையிட்டனர்.

இதனால் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த வேலுமணி மற்றும் ரவியை போலீசார் மீண்டும் கொண்டு வந்து ஊருக்குள் இறக்கி விட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டு கிராம் மக்கள் ஆத்திரமடைந்தனர். போலீசாரை கண்டித்து வினோபா நகர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கிராம மக்கள் விடிய, விடிய சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து இன்று காலையும் சாலை மறியல் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News