கோபிசெட்டிப்பாளையம் அருகே இரண்டு கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
கோபிசெட்டிப்பாளையம் அருகே இரண்டு கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.;
உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் மகா மாரியம்மன், கரிய காளியம்மன் ஆகிய 2 கோவில்கள் அருகருகே உள்ளன. இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக பொதுமக்கள் கடந்து சென்ற போது 2 கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உ ள்ளே சென்று பார்த்த போது கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உண்டியலில் இருந்த பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கோவில் வளாகத்தில் பணங்கள் சிதறி கிடந்தன. அதேபோல் உண்டியல் அருகே அரிவாள் கிடந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் கோவிலுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த 2 கோவில்கள் உண்டியலும் கடந்த ஒரு வருடமாக எண்ணப்படவில்லை. இதனால் ஏராளமான பணங்கள் இருந்ததாகவும், கொள்ளை போன பணங்களின் மதிப்பு எவ்வளவு என்று உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த 16-ந் தேதி கோபி பகுதியில் உள்ள அண்ணமார் கோவிலிலும் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து அருகில் உள்ள தோட்டத்தில் உண்டியலை விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோவில்களை குறி வைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.