2 மகன்களுடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையத்தில் 2 மகன்களுடன் இளம் பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ராஜன்நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் பூரணபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு பூரண கண்ணன் என்ற 8-ம் வகுப்பு படிக்கும் மகனும், லோகேஷ் என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். பூரணபாண்டியும்,அவரது மனைவி முத்துலட்சுமியும் ஒரே வீட்டில் இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பூரணபாண்டி உறவினர் திருமணத்திற்காக நெல்லைக்கு சென்றார்.பின்னர் மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார்.அப்போது மனைவி மற்றும் மகன்களை காணவில்லை. இதையடுத்து அவர் அருகில் உள்ள மாமனார் இசக்கிமுத்து என்பவரிடம் கேட்டார். அவர் கடந்த 8-ந் தேதி அனைவரையும் வீட்டில் பார்த்ததாகவும், அதன் பின்னர் பார்க்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து பூரணபாண்டி தனது மனைவி மற்றும் மகன்களிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர்கள் நாங்கள் நன்றாக இருக்கிறோம். எங்களை தேட வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதுகுறித்து பூரணபாண்டி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.