பெண்ணிடம் நகை பறிப்பு: தடுக்க முயன்ற வாலிபர் முகத்தில் திராவகம் வீச்சு

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர் நகையை பறித்தார். இதனை தடுக்க சென்றவர் முகத்தில் திராவகம் வீசினர்.

Update: 2021-11-10 16:15 GMT

ஆசிட் வீச்சில் காயமடைந்த ரகுபதி.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி சேவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ரகுபதி. இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வேலை தேடி ஈரோடு மாவட்டம் பெருந்துறை வந்துள்ளார். அவரை ரகுபதி நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளில் கள்ளிப்பட்டியில் உள்ள நண்பர் வீட்டில் தங்க வைப்பதற்காக அழைத்து சென்று கொண்டிருந்தார்.

கள்ளிப்பட்டி ஆற்று பாலம் அருகே சென்றபோது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். பின்னர் மோட்டார்சைக்கிளில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கொடுக்குமாறு கூறினார். இதனை ரகுபதி தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், தான் பாட்டிலில் வைத்திருந்த திராவகத்தை ரகுபதியின் முகத்தில் ஊற்றினார்.

பின்னர் பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகுபதியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்

Tags:    

Similar News