கொரானா தடுப்பு நெறிமுறைகள் விளக்க கூட்டம்
கோவிட் 19 கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உலகெங்கம் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று தற்போது இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. இதில் உருமாறிய கொரோனா பெருந்தொற்றாக விளங்கி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மஹாரஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனா தொற்று பெருமளவில் வேகமாக பரவிவருகிறது.
தற்போது தமிழத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நடவடிக்கைள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நெறிமுறைகள் குறித்து விளக்கவும் தனியார் திருமணமண்டபத்தில் கொரோனா நெறிமுறைகள் விளக்கக்கூட்டம் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறையின் கோபிசெட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கலந்துகொண்டு கொரோனா நொய் தொற்றின் இரண்டாவது அலையின் அறிகுறிகள் குறித்தும் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். மேலும் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், காய்கறி சந்தை, சிறு குறு வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தனிநபர் இடைவெளி, முககவசம் அணித்தல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் 80 சதவிகித்திற்கும் மேல் தான் பாதிப்பு வெளியில் தெரியவரும் என்றும் அதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்களில் முககவசம் அணியாலும் தனிநபர் இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தால் அபராதங்கள் விதிக்கப்படுவதுடன் அந்த வணிக நிறுவனத்திற்கும் உணவகத்திற்கும் சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.