கொடிவேரி அணை 2வது நாளாக மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பவானிசாகர் அணையில் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றம் காரணமாக கொடிவேரி அணை 2வது நாளாக மூடப்பட்டது.;
பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும், பலத்த மழையால், அணைக்கு வரும்நீர் உபரிநீராக நேற்று முன்தினம் முதல், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8:00 மணிக்கு, பவானி ஆற்றில், வினாடிக்கு, 7,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தடுப்பணையில் இருந்து, மெகா அருவியாக பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர், மேடான அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த்துறையினர் அறிவிப்பு விடுத்திருந்தனர்.
இதையடுத்து, பெரியகொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி, அடசப்பாளையம் பகுதிகளில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் கொடிவேரி அணை நேற்று மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2வது நாளான இன்று கொடிவேரி அணை மூடப்பட்டது.இன்று விடுமுறை காரணமாக அணைக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.