கோபிசெட்டிப்பாளையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய் பரவும் வாய்ப்பு உள்ளன. இதை தடுக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு ஆய்வு பணியில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுப்படி பொறியாளர் சுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், கார்த்திக், களப்பணி உதவியாளர் காளிமுத்து ஆகியோர் கோபி-ஈரோடு ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது சரவணா தியேட்டர் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்த டயர்களில் அதிகமாக கொசுப் புழு இருந்தது கண்டறியப்பட்டது. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோபி பகுதியில் கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் அந்த வளாகத்தில் தண்ணீர் தேக்கி வைத்திருந்தாலோ, கொசுக்கள் இருந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.