நம்பியூர் அருகே தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்
நம்பியூரில் கொட்டி தீர்த்த கனமழையால் தரைப்பாலம் தண்ணீரில் முழங்கியது.
நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வேண்டாம்பாளையம், கொளத்துப்பாளையம், எம்மாம்பூண்டி, மலையப்பாளையம் , வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு 8 மணி வரை கனமழை பெய்தது. இதனால் நம்பியூர் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் பகுதி வழியாக செல்லும் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த கனமழை காரணமாக குளம் நிரம்பி வேமாண்டம்பாளையம், கொளத்துப்பாளையம் செல்லும் சாலையில் தரை பாலத்திற்கு மேல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொளத்துப்பாளையம்-வேமாண்டம்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வாகனங்களை இயக்கவோ,பாலத்தை கடந்துசெல்லவோ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது .
இதனால் பாதுகாப்பு கருதி வரப்பாளையம் போலீசார் போக்குவரத்தை 2 நேரம் நிறுத்தி வைத்தனர். வேமாண்டபாளையம் கிராமம் வாலியூர்- பம்ப் ஹவுஸ் அருகில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக வாலியூர் ஓடையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வாலியூர் அப்பநாய்க்கன் பாளையம் தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து அதிகளவில் சென்றதால் வாலியூர் அப்பநாய்க்கன்பாளையம் செல்லும் கிராம சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது.மேலும் எம்மாம்பூண்டி, வரப்பாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டியம்பதி குளத்திற்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. நம்பியூர் பேரூராட்சி சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. நேற்று மாலை நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 48. மி. மி அளவு மழை பெய்துள்ளது.