நம்பியூர் அருகே கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல்
நம்பியூர் அருகே கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கதவை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு;
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நம்பியூர் கோயிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்கும் போலீஸார்
கோபிச்செட்டிபாளையம், நம்பியூர் அருகே உள்ள உணவகோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய செட்டியாபாளையம் பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடம் வைகாசி மாதம் கிடாவெட்டு திருவிழா நடைபெற்று வந்தது.
கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. நடந்த 2014ம் ஆண்டு தனியார் ஒருவர் இக்கோவிலை சுற்றியுள்ள நிலத்தை வாங்கினார். கோவில் நடுவில் உள்ள 11 சென்ட் இடம் மட்டும் கோவிலுக்கு சொந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அமாவாசையையொட்டி 100 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாமி கும்பிட வந்தனர். ஆனால், கோவிலை சுற்றி நிலத்தை வாங்கியவர் கோவில் முன்பு இருந்த கேட்டை மூடினாராம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கேட்டை உடைத்து கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றனர். இதனால் நிலத்தை வாங்கிய தரப்பினர் அங்கு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவலறிந்த, வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.