திமுக அரசுக்கு எதிராக ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

உரிமைக்குரல் முழக்கம் என்ற தலைப்பின் கீழ், ஈரோட்டில் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-07-28 10:09 GMT

பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார், பெருந்துறை சட்டமன்ற அலுவலகம் முன்பு, கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும், அ.தி.மு.க.வினர் மீது  பொய்யான வழக்குகள் போடப்படுவதாகவும் கூறி, அ.தி.மு.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும்,  உரிமைக்குரல் முழக்கம் என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோபி குள்ளம்பாளையத்தில், முன்னாள் அமைச்சரும்,  கோபி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அவருடைய வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரி, ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி, எம்.எல்.ஏ.நேர்முக உதவியாளர் சபேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் அதிமுக எம்எல்ஏ வுமான கே.ஏ.செங்கோட்டையன், தனது வீட்டின் முன்பு கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதைப்போல் கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சரும் பவானி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன், அவருடைய வீட்டின் முன்பு கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் எம்எல்ஏ அலுவலகம் உட்பட 110 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதிலும் அதிமுக உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Tags:    

Similar News