ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் இறால் பண்ணை பதிவு செய்வது கட்டாயம்: ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் இறால் பண்ணைகளை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-24 20:30 GMT

நன்னீர் இறால் பண்ணை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் இறால் பண்ணைகளை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் நன்னீரில் இயங்கிவரும் வன்னமை இறால் பண்ணைகளை வரன்முறைப்படுத்தி பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வன்னமை இறால் வளர்ப்பு பண்ணைகள் பதிவு செய்தல், உரிமம் புதுப்பித்தல், கண்காணித்தல் மற்றும் முறைபடுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான குழு நியமனம் செய்யப்பட்டு, பதிவுகள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே. கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் கட்டுப்பாட்டின் வெளிபகுதிகளில் (2கி.மீ) பதிவு பெறாமல் இயங்கி வரும் நன்னீரில் இயங்கும் வன்னமை இறால் பண்ணை உரிமையாளர்கள் உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 7வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூடுதல் கட்டட வளாகம், ஈரோடு 638 011 என்ற‌அலுவலகத்தை நேரிலோ அல்லது 93848 24368 மற்றும் 0424-2221912 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நன்னீரில் வன்னமை இறால் வளர்ப்பு செய்யும் பண்ணையின் பதிவு கோரி விண்ணப்பித்திட தவறும் பட்சத்தில் தங்களின் நன்னீர் இறால் பண்ணைகளை சட்ட விதிமுறைகள் மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பதிவு வேண்டி விண்ணப்பிக்காமலும், உரிய உரிமம் இல்லாமல் இயக்கத்தில் இருப்பின் மாவட்ட அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு மூலம் ஆய்வு செய்து பண்ணை இயக்கத்தினை நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இறால் பண்ணை மீதான நடவடிக்கையினை தவிர்க்கும் பொருட்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பித்திட நன்னீரில் வன்னமை இறால் வளர்ப்பு செய்யும் விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News