பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழந்ததா? - செங்கோட்டையன் விளக்கம்

பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழந்ததாக கூறப்படும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

Update: 2023-03-15 10:00 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, வெள்ளித்திருப்பூரில் அதிமுக சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும் போட்டியிட்டனர். அதிமுக கூட்டணிக்கு பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.‌ குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்காக லேப்டாப், சைக்கிள் திட்டங்களை கொண்டு வந்தார். தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அதிமுக திட்டங்களை நிறுத்தி வருகிறது. தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் 42 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுக்களை நாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பாரதீய ஜனதாவுடன் 5 ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. அதிமுக என்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து வரும் கட்சியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News