ஈரோட்டில் சுகாதாரமற்ற பானிபூரி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
ஈரோட்டில் சுகாதாரமற்ற முறையில் 5 பிளாஸ்டிக் மூட்டைகளில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பானிபூரி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஈரோட்டில் சுகாதாரமற்ற முறையில் 5 பிளாஸ்டிக் மூட்டைகளில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பானிபூரி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் பானிபூரியில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்தது ஆய்வில் தெரியவந்தது. இதனால் தமிழகத்தில் பானிபூரி விற்பனை மற்றும் தயார் செய்யும் இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு சத்தி சாலை அருகே பழனிமலை வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 4 குடும்பத்தினர் பானிபூரி, அதற்கான உருளை கிழங்கு மற்றும் சுண்டல் மசாலா தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, தயாரிக்கப்படும் பானிபூரி மற்றும் அதற்குள் வைத்து சாப்பிடும் மசாலா பொருட்கள் பிளாஸ்டிக்பை மற்றும் பாத்திரங்களில் எடுத்துச்சென்று பல்வேறு இடங்களில் விற்பனை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. வடமாநிலத்தை சேர்ந்த சோட்டு என்பவர் இதை மொத்தமாக தயாரிக்கிறார்.
இந்த இடத்தை ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் மற்றும் அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் 5 பிளாஸ்டிக் மூட்டைகளில் பானிபூரி தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும், அழுகிய உருளை கிழங்கு மூட்டை, வடமாநிலங்களில் பயன்படுத்தப்படும், ‘ராக் சால்ட்’ எனப்படும் உப்பு கற்கள் மற்றும் பொடிகள், தரமற்ற மசாலா பொருட்கள், கலர் பொடிகள், செயற்கையான சிட்ரிக் ஆசிட், உருளை கிழங்கு மசாலா செய்வதற்காக அழுகிய மற்றும் முளைத்து மோசமாக காணப்பட்ட உருளை கிழங்கை அவித்தும் வைத்திருந்தனர். அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.
அதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் கூறியதாவது:-
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரி, மசாலா பொருட்கள், ராக் சால்ட், அவித்த மற்றும் அவிக்கப்படாத மோசமான உருளை கிழங்கு போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.
இன்னும் சில நாட்களுக்கு பானிபூரி தயாரித்து விற்கக்கூடாது என கூறியுள்ளோம். இவர்களுக்கு தரமாக பானிபூரி தயாரித்து விற்பனை செய்ய உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னர், ஒவ்வொரு தயாரிப்பு இடங்கள், விற்பனை செய்யும் இடங்களுக்கும் உரிமம் வழங்கி, பானிபூரி தயாரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.
இங்கிருந்து, உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்புகிறோம். அதன் விபரம் தெரிந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பானிபூரி மட்டுமின்றி இதனுடன் தொடர்புடைய பிற உணவு பொருள் தயாரிப்பு இடங்களிலும் மாவட்ட அளவில் சோதனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.