ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் எத்தனை வாக்காளர்கள்?

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டார்.

Update: 2024-01-22 10:36 GMT

ஈரோடு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024ஐ முன்னிட்டு, சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மேலும் மாவட்டத்திலுள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் கடந்த நவம்பர் மாதம் 4,5 மற்றும் 25,26ம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும், பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 46,131 படிவம்-6ம், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் மேற்கொள்வதற்கு 39,523 படிவம் 7ம், திருத்தங்கள் கோரி 15,396 படிவம் 8ம் பெறப்பட்டதில் தகுதியான படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனவரி 22ம் தேதி (இன்று) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 915 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 18 ஆயிரத்து 504 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 448 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 154 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 51 ஆயிரத்து 531 பெண் வாக்காளர்களும், 47 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மேற்குத் தொகுதி தான் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ளது.

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 841 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 081 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர்.

பவானி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 048 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 057 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 வாக்காளர்கள் உள்ளனர். கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர்.

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 646 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 426 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 094 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 965 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 07 ஆயிரத்து 577 பெண் வாக்காளர்களும், 170 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 54 ஆயிரத்து 712 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலிருந்து இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 7,826 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 25,280 இளம் வாக்காளர்களும் 13,054 மாற்றுத்திறனுடையோர் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். மேற்படி இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம் மற்றும் வாக்குச் சாவடி மையங்களின் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

மேலும், பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அலுவலக நேரங்களில் பார்வையிட்டு அதில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின் Voters helpline App என்ற செயலி வாயிலாகவே voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். மேலும், பாராளுமன்ற தேர்தல் வரையிலும் வாக்காளர் பட்டியலியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 64.28 சதவீதம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், வட்டாட்சியர்கள் சிவசங்கர் (தேர்தல்), ஜெயகுமார் (ஈரோடு), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News