ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர் திறந்து வைத்தார்
ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு ஒன்றியத்தில் 1982 ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், இத்தொழிற்சாலையில் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்தீவன ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1 கோடியே 70 லட்சம் ரூபாயும், ஒன்றிய பங்களிப்பாக 1 கோடியே 70 லட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதன்மூலம் 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை சார்ந்த 7792 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்க வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.