முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பண்ணை வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பண்ணை வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-06-24 11:02 GMT

கொள்ளை நடந்த சுப்புலட்சுமி ஜெகதீசனின் பண்ணை வீடு.

திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஈரோடு மாணிக்கம்பாளையம் விஐபி நகரில் ஒரு வீடு உள்ளது. இதே போல் மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் கிராமம் மினி காடு என்ற இடத்தில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது.

இவர், திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திமுகவை விட்டு விலகினார். தற்போது எந்த ஒரு இயக்கத்திலும் சேராமல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பண்ணை வீட்டை சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர்  கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (23ம் தேதி) இரவு கோவிந்தராஜ் வழக்கம்போல் பண்ணை வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று (24ம் தேதி) காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் கணவர் ஜெகதீசனுக்கும், மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பதும், அந்தப் பணம் தோட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News