ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மீன் கடை ஊழியர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி.
ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் மனைவிக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமச்சந்திரன் ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை பெற்றுக் கொள்ளாமல் போலீசார் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கும் புகார் தெரிவிக்க வந்தார். ஆனால் அவரால் எஸ்.பி.யை நேரடியாக சந்திக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையை வாழ விருப்பம் இல்லாமல் விரக்தியடைந்த ராமச்சந்திரன் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனக்குத்தானே ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்தனர். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கேயே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து ராமச்சந்திரன் போராட்டைத்தை கைவிட்டார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கலெக்டர் அலுவலகத்தில் மீன் கடை ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.