பெற்ற 2 மகன்களை நரபலி கொடுக்க முயற்சி? ஈரோட்டில் பெற்றோர் உட்பட 5 பேர் கைது
ஈரோட்டில், பெற்ற இரு மகன்களையே நரபலி கொடுக்க முயன்ற புகாரில் தாய், தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு ரங்கம்பாளயத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், ஜவுளி வியாபாரி. இவரது மகன்கள் தீபக் ( 15 ) மற்றும் கிஷாந்த் ( 6 ) ஆகிய இருவரும், தனது தாத்தா மற்றும் பாட்டி உதவியுடன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தனது தந்தை ராமலிங்கம், இரண்டாவது திருமணம் கொண்டு தனது தாய் ரஞ்சிதா மற்றும் இரண்டாவது மனைவி இந்துமதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிந்து வருவதாகவும், தனது தாய் ரஞ்சிதா, தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், எங்களை பாடங்கள் படிக்க விடாமல் , வீட்டு வேலைகளை செய்ய வைத்தும் , குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை செய்து முடிக்காவிட்டால் பாத்ரூம் கழுவும் கிருமி நாசினியை குடிக்க வைத்தும் , மிளகாய் பொடி கலந்து சாப்பாட்டை சாப்பிட கொடுத்தாகவும் , பாத்ரூமில் தூங்க வைத்ததோடு தங்களின் ஆண் உறுப்பின் மீது மிளகாய் பொடி தூவியும் சித்ரவதை செய்வதாகவும் சிறுவர்கள் பகீர் புகார் கூறியுள்ளனர்.
தங்கள் தாய் ரஞ்சிதா சக்தியாகவும், தாயின் தோழி தனலட்சுமி சிவனாகவும் கூறிக் கொண்டு, தங்களை நரபலி கொடுக்கப்போவதாக, அவர்கள் மிரட்டி வந்ததாக, சிறுவர்கள் இருவரும் காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தாலுக்கா காவல்துறையினர், சிறுவனின் தந்தை ராமலிங்கம், தாய் ரஞ்சிதா, ராமலிங்கத்தின் இரண்டாவது மனைவி இந்துமதி, ரஞ்சிதாவின் தோழி தனலட்சுமி மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மாரியப்பன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் சிவன் சிலை, பூஜைக்குரிய வேர்கள், வேல் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்றோர் நரபலி கொடுக்க முயன்றதாக, பெற்ற மகன்களே புகார் அளித்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.