பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் குறித்து முதல்வருடன் ஆலோசனை : அமைச்சர் சாமிநாதன்
பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் அமைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்.
ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, சுப்ராயன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
இந்த ஆய்வு கூட்டம் திமுக பொறுப்பேற்றவுடன் நடைபெறுகின்ற முதல் கூட்டம். கொரோனா தொற்று காரணமாக வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது 98 சதவீதம் தொற்று குறைப்பு நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது வரை தேங்காய், பருப்பாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனை மாற்றி முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. திட்டப்பணிகளுக்கான மத்திய அரசின் வழிகாட்டு முறைகள் அதிகளவில் உள்ளதை திருத்தி அமைக்க வேண்டும். இதனால் மக்களின் வரிப்பணம் மூலம் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் அமைப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவு குறித்த நகல் பெற்று பத்திரிக்கையாளர்கள் நலன் பாதிக்காத வகையில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் நலவாரியம் அமைப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனைக்கு பிறகு விரைவில் அறிவிக்கப்படும்.மலை கிராமங்களில் செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் மத்திய அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பினி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.