ஈரோடு: ஏஐடியுசி தூய்மைப்பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில், ஏஐடியுசி தூய்மைப்பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியுசி தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தின் முடிவிற்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி, பெரியசேமூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா காலப்பணிக்கு மருத்துவத்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித்துறை தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மாஸ்க், கிளவுஸ், பூட்ஸ்/கம்பூட்ஸ், ஏப்ரான்/ஜாக்கெட்ஸ், சானிடைசர், சோப் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தேவையான அளவுக்கு தடையின்றி வழங்க வேண்டும்.
அனைத்து உள்ளாட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தினமும் வேலைக்கு செல்லும் முன்பு ஆக்சி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.