ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்

ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Update: 2024-05-01 11:58 GMT

ஈரோட்டில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மதிய வேலைகளில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்வஸ்திக் ரவுண்டானாவில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. எனவே, பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி அதிகபட்சமாக 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், இன்று (மே.1) அதையும் தாண்டி 110.48 டிகிரி வெயில் பதிவானது.

இதனால் பகலில் அனல் காற்று வீசியது. சாலையில் பொதுமக்களின் நடமாட முடியவில்லை. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் அனல் காற்று தாக்கியது. வெயில் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் குவிந்தனர்.

பகலில் கொளுத்திய வெயில் தாக்கத்தின் உஷ்ணம் இரவிலும் உணரப்பட்டது. மின்விசிறிகள் அனல் காற்றை கக்கியது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் கடுமையான புழுக்கத்தில் சிக்கி தவித்தனர். இத்தகைய சூழ்நிலையில், வெயில் கொடுமையோடு மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

Similar News