ஈரோட்டில் தொடர்ந்து 3வது நாளாக 104 டிகிரியை தொட்ட வெயில்

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 31ம் தேதி 3வது நாளாக 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.;

Update: 2024-03-31 15:00 GMT

வெயிலால் அவதி.

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3வது நாளாக 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால், குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கடந்த பிப்ரவரியில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மனித உடலின் சராசரி வெப்பநிலை, 36.1 டிகிரி செல்ஷியஸ் (97 டிகிரி பாரன்ஹீட்) முதல், 37.2 டிகிரி செல்ஷியஸ் (99 டிகிரி பாரன்ஹீட்) ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகரிக்கும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி, உடல் சராசரி வெப்பநிலையை தாண்டுகிறது.

கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும் போது, உப்புச்சத்து பற்றாக்குறையும், நீர்ச்சத்து பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. அதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்தளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம். பொதுமக்கள் வெயில் காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர். ஈரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதாவது, தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வெயில் அளவாக கடந்த இரண்டு நாட்களும் 104 டிகிரி பரான்ஹீட் என்ற அளவாக இருந்தது.

இந்த நிலையில், 3வது நாளாக இன்றும் (31ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வர பயந்து, வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வெயிலில் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர், கம்மங்கூழ், கூல்டிரிங்ஸ், பழச்சாறு போன்ற பானங்களை அருந்தி வருகின்றனர்.

Tags:    

Similar News