ஈரோடு நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது

ஈரோடு ஈ.பி.பி.நகரில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 வாலிபர்களை ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-19 05:40 GMT

போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேர்.

ஈரோடு ஈ.பி.பி.நகரில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 வாலிபர்களை ஈரோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாநகரில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போலீசார் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரம் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் ஈரோடு மாநகரில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது போதை ஊசி, மருந்து விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்..

இந்நிலையில், ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்பனை நடந்து வருவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்த் (வயது 26), தஞ்சாவூர் மாவட்டம் வண்டிப்பேட்டையை சேர்ந்த வடிவேல் மகன் கவுதம் (26), ஈரோடு மாணிக்கம்பாளையம் முதல் வீதியை சேர்ந்த ஷெரீப் மகன் அமீர் (23) ஆகியோர் என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News