ஒடிசா இளைஞர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பறிப்பு.. ஈரோட்டில் 3 பேர் கைது...

ஈரோட்டில் ஒடிசா மாநில இளைஞர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பறித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-01-16 05:15 GMT

கோப்பு படம்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர் (வயது 29). இவரது நண்பர் திலீப் ஈரோட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில், வேலை தேடி தனது நண்பர் திலீப்பை பார்ப்பதற்காக சுதீர் ஈரோடு வந்தார். பின்னர், வீரப்பன்சத்திரம் கொத்துகாரர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டல் அவர் திலீப்புடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த, 14 ஆம் தேதி காலை ஏழு பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென திலீப்பின் வீட்டுக்குள் நுழைந்தது.

பின்னர், இருவரையும் கம்பியால் தாக்கி திலீப்பிடம் இருந்த 5,200 ரூபாயை பறித்து கொண்டனராம். அதன் பிறகு திலீப் மற்றும் சுதீர் ஆகியோரது செல்போன்களையும் அவர்கள் பறித்துள்ளனர். அந்த செல்போனில் கூகுள் பே வசதி இருப்பதை அறிந்த அந்த கும்பல், அதன் மூலம் தங்களுக்கு பணம் அனுப்புமாறு கேட்டு ஆயுதங்களை காட்டி மிரட்டியு உள்ளனர்.

அவர்களது வங்கிக் கணக்கில் போதில பணம் இல்லாததால் உயிருக்கு பயந்த இருவரும், ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்ப நண்பர்களுக்கு போன் செய்து, தங்கள் கூகுள் பேவுக்கு, 40 ஆயிரம் ரூபாய் பெற்று, பின்னர் அந்த கும்பலுக்கு கூகுள் பே மூலம் வழங்கினராம். இதை தொடர்ந்து ஆம்னி வேனில் இருவரையும் ஏற்றிச்சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டு விட்டு 7 பேரும் தப்பி சென்றுள்ளனர்.

பணத்தை இழந்த இருவரும், அந்தப் பகுதி மக்களிடம் விபரம் கூறிய நிலையில், வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீஸார், வீரப்பன்சத்திம் பெரியவலசு ராதா கிருஷ்ணன் வீதியை சேர்ந்த கார்த்திக் (32), திருச்செங்கோடு சூரியம்பாளையம் காட்டு வலசை சேர்ந்த பூபதி (21), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார் (22) ஆயோரை கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சோம சுந்தரம், லிங்கேஸ், பிரவீன், பிகாசு ஆகியோரை தேடி வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் வீரப்பன்சத்திரம் போலீஸார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News