ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 382 மனுக்கள் மீது நடவடிக்கை

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட 382 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-06-12 12:00 GMT

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். உள்படம்:- பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 382 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, பணியின்போது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 அரசுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், 1 பயனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 350 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளும், 1 பயனாளிக்கு ரூ.11 ஆயிரத்து 488 மதிப்பீட்டில் செல்போன் மற்றும் பேருந்து பயண அட்டையினையும், 1 பயனாளிக்கு ரூபாய் ஆயிரத்து 800 மதிப்பீட்டில் ஊன்றுகோள் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக 1 பயனாளிக்கு ரூ.17 ஆயிரத்திற்கான காசோலையினையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News