காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்த வைத்த ஈரோடு எம்பி
Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு ஈரோடு எம்பி பிரகாஷ் தண்ணீரை திறந்து வைத்தார்.
Erode news, Erode news today- பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கான தண்ணீரை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத்திற்காக இன்று (12ம் தேதி) முதல் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கான தண்ணீரை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்காலில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது, 2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக வாய்க்காலில் உள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், வரும் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் பி.கே.பழனிசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரகாஷ், உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் தினகரன், சபரிநாதன், பூபாலன், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.