ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியின்படி ஊதியம் மற்றும் பணியாணை வழங்காததை கண்டித்து மீண்டும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியின்படி ஊதியம் மற்றும் பணியாணை வழங்காததை கண்டித்து மீண்டும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில், தூய்மை பணி, ஹவுஸ் கீப்பிங், காவலாளி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள தினக்கூலியான ரூ.707 வழங்க வேண்டும்.
ஆனால் ஒப்பந்த நிறுவனமானது மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள கூலியை விட குறைவாக அதாவது நாளொன்றுக்கு ரூ.230 மட்டுமே வழங்கி வருகின்றது. இதைக்கண்டித்து தூய்மை பணியாளர்கள் 16 பேர் கடந்த 9ம் தேதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனால் நிறுவனம் அவர்களை பணிநீக்கம் செய்தது. இதை கண்டித்து, 16 பேரும் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நிறுவன மேலாளர் வினோத் பேச்சுவார்த்தை நடத்தி, டிசம்பர் - ஜனவரி மாத ஊதியம், முறையான பணி வழங்குவதாக கூறவே, போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் அறிவித்தபடி, பணியும் ஊதியமும் வழங்காததால் நேற்று இரவு 7 மணி முதல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் துவங்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட கல்பனா என்ற தூய்மை பணியாளர் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.