ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம் நிறைவு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மேற்கொண்ட காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மேற்கொண்ட காத்திருப்பு முடிவுக்கு போராட்டம் வந்துள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவித்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 31-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில், ஒப்பந்த நிறுவனமான குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதில், ஒப்பந்ததாரர் நிறுவனத்தின் பொது மேலாளர் பீட்டர் கோம்ஸ், மேற்கு மண்டல மேலாளர் ஆதி நாராயணன், கிளை மேலாளர் வினோத் ஆகியோரும், தொழிலாளர் தரப்பில் ஏஐடியுசி ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் தலைவரும், ஏஐடியுசி மாநிலச் செயலாளருமான சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் தோழர் செல்வம், சங்க உறுப்பினர் தோழர் கல்பனா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், இதுகுறித்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறியதாவது, ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக, கடந்த மாதம் 25-ம் தேதி கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 6 தொழிலாளர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதோடு, 16 தொழிலாளர்களுக்கு இதே மருத்துவமனையில் பணி வழங்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களுக்கு முழுச் சம்பளம் வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ நலன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் மீது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்துக்குள் தீர்வுகாண நிர்வாகத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஏற்று பணியாளர்கள் பணிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.