ஈரோடு: மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

அந்தியூரில் புதிய மின் இணைப்பு வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை மின் பொறியாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2022-12-20 11:45 GMT

பைல் படம்

அந்தியூரில் புதிய மின் இணைப்பு வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை மின் பொறியாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 62), விவசாயி. இவர், கடந்த 2005ம் ஆண்டு தவிட்டுபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடோனுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக, அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு இளநிலை மின் பொறியாளர் நிலை-1 ஆக பணியாற்றி வந்த ராமலிங்கம் என்பவர், ஈஸ்வரமூர்த்தியிடம் புதிய மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்க ரூ.16 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், ஈஸ்வரமூர்த்தி அவ்வளவு தொகை தர முடியாது என்றதால், ரூ.6 ஆயிரத்தை குறைத்து ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் மின் இணைப்பு வழங்க முடியும் என ராமலிங்கம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் ரகசியமாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின் பேரில், ஈஸ்வரமூர்த்தி கடந்த 2005ம் தேதி புதிய மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரத்தை இளநிலை மின் பொறியாளரான ராமலிங்கத்திடம் வழங்கினார். அதனை ராம லிங்கம் பெற்றுக்கொண்ட தும். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் ராமலிங்கத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து ராமலிங்கம் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையை முடித்து மாஜிஸ்திரேட் சரவணன் நேற்று தீர்ப்பளித்தார்.அதில், அரசு பணியை செய்ய லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக ராமலிங்கத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத மும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனைகளை ஏக்காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

Tags:    

Similar News