திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்: மனைவி மீது எஸ்.பி-யிடம் கணவன் புகார்
திருமணம் செய்து ஏமாற்றிய மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி..யிடம் கணவன் புகார் அளித்தார்.;
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும் கோவையை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த நான்கு நாட்களுக்கு பிறகு, மறு அழைப்பிற்காக தேவி கோவைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாகக்கூறிச் சென்ற தேவி, பல நாட்களாகியும் மீண்டும் வராததால் சந்தேகமடைந்த முருகேசன், இதுகுறித்து விசாரித்துள்ளார்.அப்போது தான், தேவிக்கு ஏற்ககெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று இரண்டு குழந்தைகள் இருப்பதும், தற்போது வேறு ஒருவடன் திருமணம் நடைபெற இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து எஸ்.பி..தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், கோவையை சேர்ந்த தேவி திருமணம் செய்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தனது திருமணத்தின் போது வாங்கிய தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் 1.30லட்சம் ரூபாய் திரும்ப பெற்றுதர வேண்டும் என்றும், தொடர்ந்து திருமணம் செய்து ஏமாற்றி வரும் தேவி மற்றும் அவருக்கு துணை போகும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் முருகேசன் தெரிவித்துள்ளார்.