ஊரடங்கு பீதியால் ஈரோடு ரயில் நிலையத்தில் குவியும் வட மாநிலத்தவர்கள்

கொரானா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வடமாநிலத்தவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

Update: 2021-04-19 06:12 GMT

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இணையாக ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், கட்டிட தொழில், ஜவுளி, கார்மென்ட்ஸ், தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது, ரயில்கள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் குடும்பத்துடன் நடை பயணமாக சென்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதையொட்டி, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஒருவேளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாது என வடமாநில தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பல்வேறு நிறுவனங்களில் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக சாய தோல் தொழிற்சாலை, கட்டிட பணிகள், பேக்கரி கடைகள் ஆகியவற்றில் வேலை பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் பொது ஊரடங்கு மீண்டும் போட்டு விடுவார்கள்என்ற பயத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். பீகார், ஓரிசா, ராஜஸ்தான் போன்ற வடமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈரோடு மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பெட்டி, படுக்கையுடன் ஈரோடு ரெயில்வே நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

எனினும், ரயில்களில் முன்பதிவு செய்திருத்தல் கட்டாயம் என்பதால், இதை அறியாத சில வடமாநில தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து அங்கேயே காத்திருந்தனர்.

Tags:    

Similar News