ஈரோடு மாநகரில் கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.25ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. எடுத்துள்ளனர்.

Update: 2021-05-05 10:15 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

அதன்படி இன்று ஒரே நாளில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு அபராதம் விதித்து அந்த ஆறு கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் முக கவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத வர்கள் என ஒரே நாளில் ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் மாநகர் பகுதியில் 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

60 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள ஆத்மாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறப்பவர்களுக்கு என்று தனியாக எரியூட்டும் தகனம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணி முடிவடைந்து தயாராகிவிடும். இதைப்போன்று மாநகர் பகுதிகள் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் தினமும் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். தேவையான டோஸ் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News