கவனிக்கப்படாத காவிரி ஆறு: ஆகாயத்தாமரையை அகற்றுவது யாரு?
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு கவனிப்பாரின்றி பரிதாப நிலையில் உள்ளது; ஆகாய தாமரையால் மூடப்பட்டு விவசாய நிலம் போல் காட்சியளிக்கிறது. இதை, அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.;
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உருவாகி மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கிருந்து தமிழகத்தை வளம்கொழிக்க பாய்ந்து வருகிறது, காவிரி ஆறு. காவிரி ஆறு, சேலம் மாவட்டத்தை செழுமையாக்கி, பின்னர் ஈரோடு மாவட்டமான நெரிஞ்சிப்பேட்டை எல்லைக்கு வந்தடைகிறது.
அங்கிருந்து பவானி பகுதியை வந்தடைந்ததும் அங்கு பவானி ஆறும் காவிரியுடன் இணைந்து ஈரோடு வழியாக கொடுமுடி சென்று கரூர், திருச்சி மற்றும் தஞ்சையையும் வளம் செழிக்க பாய்ந்து செல்கிறது. இவ்வாறு தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் காவிரி ஆற்றின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.
ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களின் கரைகளையும் தொட்டு செல்லும் வகையில், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. ஈரோட்டின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றில், ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளாலும், சாய சலவை தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதாலும் ஆற்றுநீர் முற்றிலும் மாசு அடைந்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆற்றிநீர் சுத்தப்படுத்தும் பணிகள் முற்றிலும் நடைபெறாமல் உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே ஆகாய தாமரை வளர்ந்து மூடப்பட்டுள்ளது; இதனால், பச்சை பசேலென்று விவசாய நிலம் போல் காட்சியளிக்கின்றது.
மேலும், ஆற்றுநீரில் ஆகாய தாமரைகள் முற்றில் ஆக்கிரமித்து இருப்பதால் மீன்கழிவுகள், குப்பைகள் போன்றவை நீரில் தேங்கி நிற்கின்றன. இதனால் பெரும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆகாய தாமரைகள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.