ஈரோடு மாவட்டத்தில் நேற்று 97ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், 97,198 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 01:15 GMT

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இதையடுத்து,  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்குச்சாவடி அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில்,  847 மையங்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு, இலவச தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று காலை 7 மணி முதல்,  நேற்றிரவ் வரை தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அதன்படி நேற்று ஒரேநாளில்,  ஈரோடு மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 97,198 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 67 மையங்களில் 16,315 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News