ஈரோடு: கொரோனாவை கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம்

ஈரோடு மாநகர பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்

Update: 2021-06-01 10:32 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி 1,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு, வீடாக சென்று சோதனை மேற்கொள்ள உள்ளாட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில், ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் உள்ள 60 வார்டுகளிலும் ஆசிரியர்கள், மாநகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால், தன்னார்வலர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்பேரில், ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலடங்களிலும் கல்லூரி படித்த, படிக்கும் இளைஞர்கள், பிற தனியார் துறைகளில் பணியாற்றி வந்த ஆண்கள், பெண்கள் என நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக 4 மண்டலங்களிலும் தலா 300 தன்னார்வலர்கள் என 1,200பேர் நியமித்துள்ளோம். அவர்களுக்கு மாநகராட்சியின் தற்காலிக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 100 வீடுக்கு ஒரு பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று காய்ச்சல் சளி உள்ளதா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இதில் காய்ச்சல் சளி போன்ற தொற்று அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்துவார்கள். மேலும் ஏற்கனவே வீடு தனிமையில் இருப்பவர்கள் வீட்டில் தான் இருக்கிறார்களா அல்லது வெளியே சென்று வருகிறார்களா என்பது குறித்தும் கண்காணிப்பார்கள். மேலும் அந்தந்த பகுதியில் இருக்கும் மெடிக்கல் கடைக்கு சென்று இந்த பகுதியில் உள்ளவர்கள் யாராவது காய்ச்சல் சளிக்கு மருந்து எடுத்துக் கொண்டார்களா என்பது குறித்தும் விவரம் கேட்டு அறிவார்கள். அவ்வாறு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் முகவரியை கேட்டறிந்து அது குறித்த விவரங்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள். தன்னார்வலர்களை கண்காணிக்க 100 மாநகராட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்கள் தன்னார்வலர்களுக்கு பணியை ஒதுக்குவார்கள். மேலும் தன்னார்வலர்கள் கொடுக்கும் அறிக்கையை பெற்றுக்கொண்டு மாநகராட்சியில் சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News