ஈரோடு கிழக்குத் தொகுதி: வாகன சோதனையில் ரூ.1.30 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலை கண்காணிப்பு குழுவினர் (கோப்பு காட்சி)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1.30 லட்சம் ரூபாயை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ. வெ. ரா. திடீர் என கடந்த 4ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதும் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணித்து தடுக்க, 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு அடுத்த வெண்டிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பைக்கில் வந்த கரூரை சேர்ந்த கவின் (21) என்பவரை சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணங்களின்றி 1 லட்சத்து 34 ஆயிரத்து 150 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. பைனான்ஸ் ஊழியரான இவர் ஈரோட்டில் பைனான்ஸ் செய்து வருவதாகவும், அதற்காக பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தெரிவித்தனர்.