மத்திய அரசு திட்டங்களை அறிவித்தும் ஈரோடு ஸ்மார்ட் ஆக தெரியவில்லை: அண்ணாமலை தாக்கு
மத்திய அரசு 54 திட்டங்களை அறிவித்தும் கூட ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் ஆக தெரியவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு 54 திட்டங்களை அறிவித்தும் கூட ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் ஆக தெரியவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஈரோட்டில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், சூரம்பட்டியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு ஈரோடு மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.304 கோடி மதிப்பிலான 54 திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் ரூ.1,079 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவடைந்து விட்டன. மீதி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஈரோடு மாநகராட்சி இன்னும் 'ஸ்மார்ட்' ஆகவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பணத்தை வாரி வழங்குகிறார். ஆனால் திமுக கமிஷன் அடிக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றியடைய செய்தால் ஈரோட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கூறினர். ஆனால் நான் குண்டும், குழியுமான சாலைகளில் தான் நடந்து வந்தேன்.
உலக புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறைக்கு திமுக களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறது. ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சென்னை ஆணையர் பேட்டி கொடுக்கிறார். அதாவது கத்தியை எடுத்து வெட்டியும் சாகவில்லை என்பதுபோல் அவரது பேச்சு உள்ளது.
கோவையில் தற்கொலை தீவிரவாதியால் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஆம்னி வேனில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. ஆனால் அதை சிலிண்டர் விபத்து என்று முதலமைச்சர் கூறி வருகிறார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், அப்படி தானே கூறுவார். அதேசமயம் பல்லடத்தில் குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை படுகொலை செய்தனர். அந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மட்டுமே முதலமைச்சர் நிவாரணம் வழங்கினார்.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று திமுகவினர் பொய் சொல்லி வருகின்றனர். பொய் சொல்லுவதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கமே கொடுக்கலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் 511 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 20 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. சனாதனத்தை அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் எதிர்த்து பேசி வரும் நிலையில் நிறைந்த அமாவாசை அன்று முதலமைச்சர் மகளிர் உரிமைத் தொகையை பெண்களுக்கு வழங்கியிருக்கிறார்.
தலையை ஆட்டும் பொம்மை முதலமைச்சராகவே ஸ்டாலின் செயல்படுகிறார். 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் கடந்த 30 மாதங்களில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை அளிப்பதாக உறுதி அளித்து இருந்தார். இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் மத்திய அரசில் வழங்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அவர் உறுதியாக சொன்னதை செய்வார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் ஆசிரியர்கள் பணிக்கு சேரும் வயது வரம்பை 56 ஆக தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது.
பாஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா மாறும். ஆனால் தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும் இந்த மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு காரணமாக விசைத்தறிக்கூடங்கள், தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஈரோட்டில் வாரச்சந்தை, மார்க்கெட் நடக்கும் பகுதிகளில் மாநகராட்சியையே டெண்டர் எடுத்தது போல் திமுகவினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் முத்துசாமியின் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் அவரே குடிகாரர்களை, மதுபிரியர்கள் என்று அழைக்க வேண்டும் என கூறும் அளவுக்கு திமுகவினர் மாற்றி விட்டனர். எனவே நல்லவர்களே இருக்க முடியாத இடமாக திமுக உள்ளது. ஈரோட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு எம்.பி.யாக பா.ஜனதாவை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என்றார்.