ஈரோட்டில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி... ஆட்சியர் பங்கேற்பு...

ஈரோட்டில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-25 13:15 GMT

ஈரோட்டில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், "வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற தலைப்பில் வாக்காளர் தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தேசிய வாக்காளர் தின உறுதிமொழியாக, "மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்" என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மேலும், நந்தா மற்றும் வேளாளர் பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்திய தேசிய வரைபடம் வடிவில் நின்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, நந்தா மற்றும் வேளாளர் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பெருந்துறை ரோடு வழியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சென்றடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, வாக்களிப்தின் அவசியம் குறித்த பதாதகைகளை கையில் ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி சுவரொட்டி வடிவில் சுவர் இதழ் போட்டி, பாட்டு போட்டி, சுயஉதவிக் குழுவினருக்கான கோலப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நந்தா இயன்முறை கல்லூரி மாணவன் ஷேன் எபி டேனியல் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வாக்களிப்பதின் அவசியம் குறித்து உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் (பொது), பழனிக்குமார்,(நிலம்), குருநாதன் (கணக்குகள்), வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன், ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், நந்தா மற்றும் வேளாளர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News