மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு.. ஈரோடு அருகே மீனவர்கள் அதிர்ச்சி...
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே மீனவர்கள் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டை கிராமம், ஆரியாகவுண்டனூர் பகுதியில் ஆயிரவைசியர் மடத்துக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீனவர்கள் மீன் பிடித்து விற்பனை செய்வது வழக்கம். இந்தநிலையில், நேற்று அதிகாலை பரிசலில் சென்ற மீனவர்கள் ஏரியில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மீனவர்கள் விரித்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தவது அறியாமல் தவித்த மீனவர்கள் பின்னர் சுதாரித்துக் கொண்டு, அப்படியே, வலையுடன் பாம்பைக் கரைக்குக் கொண்டு வந்தனர். மீனவர்களின் வலையில் மலைப்பாப்பு சிக்கிய தகவல் பரவியதும் அங்கு ஏராளமானோர் திரண்டனர்
பின்னர், வலையில் மலைப்பாம்பு சிக்கிய விவரம் குறித்து மீனவர்கள், சென்னம்பட்டி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் வலையில் இருந்து பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வலையில் சிக்கிய பாம்பை கூண்டுக்குள் அடைத்து, சென்னம்பட்டி பகுதியில் அடர்ந்த வனத்தில் விடுவித்தனர்.
மீனுக்காக விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கிய சம்பவம் ஆரியாகவுண்டனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறியாகவுண்டனூர் ஏரியில் மலைப்பாம்பு சிக்கிய விவரம் அந்தப் பகுதியில் காட்டுத்தீ போல பரவி உள்ளது. இதனால், அந்த ஏரி பக்கம் செல்லவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், ஏரிக்குள் குளிக்க செல்வோர் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.